“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு பாதுகாத்து வருவதாகக் குற்றம்சாட்டி, திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இந்த ‘டம்மி முதல்வர்’ இன்னமும் பாதுகாப்பது ஏன்? மேலும், கோரிக்கை வைத்தவரை அடித்துத் துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும், “இது ஆட்சியா? இல்லை, த.வெ.க.-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா? தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் இல்லாத முதல்வர், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம், எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் என்று திசைதிருப்பும் அரசியலில் இறங்குகிறார். ஆன்லைன் மாஃபியாவை வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மௌன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களைக் கட்டி வையுங்கள்; இல்லை என்றால் மக்கள் சக்தி தட்டி வைக்கும்” என்று உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.