விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதற்காக கடந்த 21-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களைச் சந்தித்தோம். சிறையில் இருந்தாலும் அவர் இன்னும் வேகத்துடன் மக்கள் பணியாற்றும் உத்வேகத்தில் உள்ளார். அவரது விடுதலைக்காகத் தலைவர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளைக் கூறி ஆறுதல் அளித்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில், “திமுக மிசா மற்றும் எமர்ஜன்சியையே பார்த்த இயக்கம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் இந்தச் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்குக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டன் கூட அஞ்சமாட்டான். விமர்சனங்களுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
