“இது சர்க்காரா? இல்ல சர்க்கஸா?”…. இரவோடு இரவாக கைது… தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்து வாங்கிய உதயநிதி…!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.கே. வெங்கடேசன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திற்குத் தாம் அடிக்கடி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், “நான் தஞ்சாவூருக்கு வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னை நோக்கமின்றிக் கைது செய்து இங்குதான் அழைத்து வருகிறது. காவிரியில் உரிய தண்ணீர் வரவில்லை என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராடியதற்காகவே இரவோடு இரவாக என்னை கைது செய்தனர். ஆனால், என் பேச்சைக் கண்டு அஞ்சிய இந்த அரசு, இறுதியில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்தது” எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஜூன் 12 ஆம் தேதி சரியாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய அரசின் தவறான திட்டமிடலால் டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சட்டமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் நிதி இல்லை எனக் கூறி அரசு மறுத்து வருவதாகவும் சாடினார். விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்க நிதியில்லை என்று கூறும் அரசு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கார்கள் வாங்குவதற்கு மட்டும் பணத்தை வாரி இறைப்பதாகத் தன் உரையில் குற்றம்சாட்டினார்.

   

சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே ஆளுங்கட்சியினரும் தமிழக வெற்றி கழகத்தினரும் முயல்வதாகச் சாட்டினார். “நாங்கள் எழுப்பும் எவ்விதக் கேள்விகளுக்கும் முதலமைச்சரிடம் பதிலில்லை. இந்த அமைச்சரவையில் உள்ள மூன்று அமைச்சர்கள் மட்டுமே மாற்றி மாற்றிச் சம்பந்தமில்லாமல் பேசி வருகின்றனர். மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்றும், சரியாக ரீடிங் எடுப்பதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினால், அதற்கு எந்தத் தொடர்பும் இல்லாத பதவிகளிலிருந்து பதில்கள் வருகின்றன. மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், சட்டமன்றத்தைச் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போலவும், தினசரி ரீல்ஸ் எடுக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

   

மேலும், திராவிட மாடல் ஆட்சியின் போது இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைவர் மு.க. ஸ்டாலின் உயர்த்திக் காட்டினார் என்றும், ஆனால் தற்போதைய ‘டம்மி’ முதலமைச்சர் மாநிலத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இந்த அரசு நடத்துவது சர்க்காரா அல்லது சர்க்கஸா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் இந்த ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் தமிழக மக்கள் வரவிருக்கும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தன் உரையை நிறைவு செய்தார்.