தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பதிலளித்ததாகக் கூறி தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணை பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்தில் காலை முதலே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று கைது செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தபோது, திமுக வழக்கறிஞர்களும் முன்னாள் அமைச்சர்களும் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைதுக்கு முன்பாகத் தன் மனைவி கிருத்திகாவிடமும் மகன் இன்பநிதிவிடமும் விடைபெற்ற உதயநிதி, பின்னர் மூத்த தலைவர் துரைமுருகன் அளித்த ஆறுதலுடனும் சட்ட ஆலோசனைகளுடனும் புன்னகையுடன் காவல்துறை வாகனத்தில் புறப்பட்டார்.
தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், காவல்துறை தனது பாதையை மாற்றி அவரை செங்கிப்பட்டிக்குக் கொண்டு சென்றது. இந்தத் தகவலையறிந்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
