தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டுமென அதிமுகவும் 2026 தேர்தலில் ஆட்சியை தன்வசப்படுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவும் முயற்சி செய்து வருகின்றன. மேலும் புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் இறங்கும் தேர்தலிலேயே முதல்வர் பதவி வேண்டுமென்ற ஆசையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற முடிவில் உள்ளது. இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் அவர்களுடைய முடிவில் நிலையாக இருக்கும் நிலையில் திமுகவிற்கு மாற்று அதிமுக என இருந்த காலம் மாறி தற்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே தான் போட்டி என மாறி உள்ளது.
இது அதிமுகவை மூன்றாவது இடத்திற்கும் திமுகவை அதிருப்திக்கும் ஆழ்த்தியுள்ளது. 75 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த திமுகவை விஜய் நேரடியாக எதிர்ப்பது, வியப்படைய செய்தது. விஜய்க்கும் துணை முதல்வர் உதயநிதிக்கு உள்ள ஓர் ஒற்றுமை இளைஞர்களின் வாக்கு தான். விஜய் மிகப்பெரிய பிரபலம் என்பதால் அவருக்கு இயல்பாகவே இளைஞர் ரசிகர்கள் அதிகம். உதயநிதியும் இளைஞர் அணி தலைவராக இருந்ததால் அவர்களுடைய வாக்கை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இதனால் விஜய் அரசியலில் குதித்து உள்ளதால் திமுக சேமித்து வைத்த இளைஞர்களின் வாக்கு கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.
இதற்காக திமுக மக்களை சந்திக்கும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இளைஞர்களை கவரும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. அதன் முதல் கட்டமாக திருவண்ணாமலையில் நாளை திமுக இளைஞரணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. 13 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க விஜய்க்கு கூடும் கூட்டத்தை முறியடிக்கும் வகையில் அமையும் என்றும் திமுகவுக்கு தான் இளைஞர்களின் வாக்கு என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அமையும் என்றும் தெரிகிறது.
