கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்ற 26 வயது வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அந்தப் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மதுபோதையில் வந்த அண்ணாமலை, கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறு ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த அண்ணாமலை தனது காதலியின் தந்தைக்கு போன் செய்து தகராறு செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் அந்த பெண் அவரை கல்யாணம் செய்ய மறுத்ததால் ஆவேசமடைந்த அண்ணாமலை, தான் மறைத்து வைத்திருந்த சூரியக்கத்தியை எடுத்து காதலியின் கன்னத்தில் வெட்டிக் கிழித்தார். ரத்தம் கொட்டியது. அந்தப் பெண் வலி தாங்காமல் அலறினார். அங்கிருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வருவதைப் பார்த்து அண்ணாமலை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
