சென்னை பெரும்பாக்கத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த லாவண்யா, தனது 13 வயது மகள் இனியாவை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் நூக்கம்பாளையம் பிரதான சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த வேகத்தடை மீது ஏறிய வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது இருசக்கர வாகனத்திற்கு பின்னால் செங்கல் ஏற்றி வந்த லாரி, அவர்கள் மீது ஏறியதில் லாவண்யாவும் இனியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
