பகீர்..! மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் அடுத்தடுத்து பரிதாப பலி.. நடந்தது என்ன..??

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்த வைஜிநாத் – இந்துமதி தம்பதியினர், ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது உறவினர் ஒருவர் வாங்கி வந்த மாம்பழங்களை இந்துமதி மற்றும் அவரது நான்கு மகள்கள் ஆசையுடன் சாப்பிட்டுள்ளனர். மாம்பழங்களைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஐந்து பேருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலியும், தொடர் வாந்திப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை உடனடியாக கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி இந்துமதியின் மகள்களான 17 வயது புவனேஸ்வரி மற்றும் 10 வயது சந்தியா ஆகிய இரு சிறுமிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மாம்பழம் சாப்பிட்ட தாய் மற்றும் மற்ற இரு மகள்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாம்பழத்தில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்திருந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.