தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பிரம்மாண்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், விஜய்யின் இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் தடம் பதிக்க விஜய் தயாராகி வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து வந்த விஜய், தற்போது அதிமுகவையும் நேரடியாகச் சாடத் தொடங்கியுள்ளார். அதிமுகவை “ஊழல் கட்சி” என்றும் “அடிமை கட்சி” என்றும் அவர் விமர்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் முதல்முறையாக விஜய்க்குப் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், எடப்பாடியின் ஊரிலேயே விஜய் பிரச்சாரக் களத்தில் குதிப்பது அரசியல் ரீதியாக ஒரு “ஸ்கெட்ச்” ஆகப் பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தத் தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இதே மகுடஞ்சாவடி பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே “ஜெயலலிதா சென்டிமென்டை” பின்பற்றி விஜய் இங்கிருந்து தனது தேர்தல் அதிரடியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், விஜய்யின் இந்தச் சேலம் வருகை மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த வேலூர் மக்கள் சந்திப்பு தள்ளிப்போயுள்ள நிலையில், பிப்ரவரி 13-இல் சேலத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
