சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலன் தனது அலைபேசி எண்ணை முடக்கியதால் (Block), ஆத்திரமடைந்த காதலி அவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ரோஷினி சூர்யவன்ஷி, கம்தா பிரசாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சமீபகாலமாக கம்தா பிரசாத் வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதாக ரோஷினி சந்தேகித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், கம்தா பிரசாத் ரோஷினியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஷினி, காதலனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கம்தா பிரசாத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த ரோஷினி சூர்யவன்ஷியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தன்னைத் தவிர்த்து வேறு பெண்ணுடன் பழகியதாலும், தனது செல்போன் அழைப்புகளைத் தவிர்த்ததாலும் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒருதலைப்பட்சமான சந்தேகத்தால் ஒரு வாலிபரின் உயிர் பறிபோன இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
