“எப்படியாவது தட்டித்தூக்கணும்.. ஆட்சியே இத நம்பி தான் இருக்கு”… முதல்வர் விஜய் போட்ட அந்த ரகசிய உத்தரவு…. பின்னணியில் இருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்…!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் அதிர்வுகளால் பரபரப்படைந்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் தொகுதிகள் மற்றும் திருச்சி கிழக்கு என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால், இவர்களில் 5 பேரின் கடந்த தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக முட்டுக்கட்டையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திமுக இப்போதே களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆளும்கட்சியின் இந்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், “இடைத்தேர்தல் குறித்த பணிகளில் சற்றும் தொய்வின்றி கவனம் செலுத்துங்கள்” என மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். “சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் விஜய், இந்த இடைத்தேர்தலில் காசு செலவழிக்காமல் எப்படி ஜெயிக்கிறார் என்று பார்ப்போம்” என திமுக – அதிமுக தலைவர்கள் விவாதித்து வருவதாக முதல்வருக்கு சமீபத்தில் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. இந்த ரகசியத் தகவலின் பின்னணியில் தான் முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடக்கும் 7 தொகுதிகளில் ஒன்றில் கூட சுணக்கம் காட்டிவிடக் கூடாது என்றும், ‘7-0’ என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

இருப்பினும், முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் புலம்பலையும் ஏற்படுத்தியுள்ளது. “ஐந்து தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்பதே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இப்போதே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றால் எந்தப் பணிகளை, எப்படித் தொடங்குவது?” என்று அமைச்சர்கள் தங்களுக்குள் விவாதித்து ஆதங்கப்பட்டு வருகின்றனர். ஒருபக்கம் நீதிமன்றத் தடை, மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் சவால்கள், இதற்கிடையில் ‘பணம் தராமல் வெல்ல வேண்டும்’ என்ற முதல்வரின் கறாரான இலக்கு எனப் பலமுனை அழுத்தங்களுக்கு மத்தியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் திகைத்துப் போயுள்ளனர்.