“கஜானா காலி!” – முதல் பட்ஜெட்டிலேயே திமுக-விற்கு விஜய் வைக்கப் போகும் ‘செக்’?.. அலறும் போயஸ் கார்டன் முதல் அறிவாலயம் வரை.. அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது..?

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் அர்லேக்கரின் உரையுடன் பேரவை கூடவுள்ளது. இந்த உரையில் தவெக அரசின் எதிர்கால ‘விஷன்’ மற்றும் முக்கியக் கொள்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, “திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயிருக்கிறது” என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் கர்ஜித்ததும், அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியதும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஜானாவைப் பார்க்காமலேயே எப்படி அப்படிச் சொல்லலாம் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அதற்கு விடை சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை இந்த மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் காலம் என்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது முழுமையான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஜூன் மாதத்திற்குள் இதனைச் செய்யத் தவறினால், அரசு ஊழியர்களின் சம்பளம், அன்றாடச் செலவினங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பதால், இதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

   

மறுபுறம், ஆளுநர் உரை தடையின்றி நிகழுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வழக்கமாக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பதுதான் மரபு என்றாலும், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைத் திருத்தி வாசித்ததால் ஆளும் அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. தற்போது புதிய ஆளுநர் அர்லேக்கர், தவெக அரசு கொடுக்கும் உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது முந்தைய ஆளுநரின் பாணியைப் பின்பற்றித் தன் விருப்பப்படி திருத்துவாரா என்ற விவாதம் இப்போதே தலைமைச் செயலக வட்டாரங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

   

இதற்கிடையில், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனி அரசு விழாக்களில் அதற்கு முதலிடம் தரப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார். எனினும், சட்டப்பேரவை நிகழ்வுகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்படும் முறை அல்லது அவை தவிர்க்கப்படும் சூழல் உருவானால், அதை ஆளுநர் அர்லேக்கர் எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரின் மனநிலையை அறிந்துகொள்ள முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் புதிய சர்ச்சைகளும் விவாதங்களும் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.