தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் உரசல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற பிம்பத்தை தவெக அமைச்சர்கள் கட்டமைக்க முயன்ற நிலையில், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் என அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்தனர். இதற்குப் பதிலடியாக, “யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை; விருப்பமிருந்தால் காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளச் சொல்லுங்கள்” எனத் தனது தனிச்செயலாளர் ஜெகதீஸ் பழனிச்சாமி மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு விஜய் அதிரடிச் செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மேலிடம், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மூலமாக விஜய்யைச் சந்தித்துச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், விஜய் தரப்பை மேலிடத் தலைவர்கள் இறங்கி வந்து சமாதானப்படுத்திய விவகாரம் கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கு திருப்தியளிக்கவில்லை. உடனடியாக ராகுல் காந்தியைத் தொடர்புகொண்ட சிவக்குமார், “விஜய்யிடம் நாம் இறங்கிப்போய் சமாதானம் பேசுவது கட்சியின் சுயமரியாதைக்கு உகந்ததல்ல; இந்த விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்” எனக் கூறிவிட்டு, தனக்குரிய பாணியில் களமிறங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விஜய்யை தொடர்புகொண்ட சிவக்குமார், தங்களுக்கு நம்பிக்கையான இரண்டு பிரதிநிதிகளை உடனடியாகப் பெங்களூருக்கு அனுப்பி வைக்குமாறு கோரினார். சிவக்குமாரின் அழைப்பை ஏற்று விஜய் அனுப்பிய பிரதிநிதிகளைச் சந்தித்த சிவக்குமார், மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தமிழகத்தில் நடப்பது காங்கிரஸின் தயவால் இயங்கும் கூட்டணி ஆட்சி. இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்கிவிட்டதால் காங்கிரஸை அலட்சியப்படுத்தலாம் என நினைக்க வேண்டாம். ராகுலைச் சிறுமைப்படுத்தும் வகையில் விஜய் தரப்பு நடந்துகொண்டால், ஒரே நாளில் ஆட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறும். அதோடு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விலக்கிக்கொள்ளச் செய்யும் வலிமை எங்களுக்கு உண்டு” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த இந்த அதிரடிச் சம்பவமும், சிவக்குமாரின் கடுமையான எச்சரிக்கையும் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடும் அப்செட்டான விஜய், தற்போதைய அரசியல் சூழலையும், ஏற்கனவே இடதுசாரி கட்சிகளுடன் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளையும் உணர்ந்து நிதானமான முடிவை எடுக்க முன்வந்துள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு ஆபத்தைத் தவிர்க்கவும், கூட்டணிக்குள் எழுந்துள்ள பிளவைச் சரிசெய்து தோழமைக் கட்சிகளைக் ‘கூல்’ செய்யவும் திட்டமிட்டுள்ள விஜய், வரும் 9-ஆம் தேதி கூட்டணித் தலைவர்களின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
