அதிமுக – அமமுக இணைப்பு?…. இரவோடு இரவாக நடந்த ரகசிய பேச்சுவார்த்தை… வேலுமணிக்கு செக் வைக்கும் தினகரன்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்த அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் வெளியேற்றம் ஆகியவை கட்சியை பலவீனப்படுத்தின. பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி அதில் உறுதியான எதிர்ப்பைக் காட்டி வந்தார்.

இருப்பினும், அண்மைக்கால தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளிடையே உருவான அதிருப்தி மற்றும் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்களின் அழுத்தங்கள் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக மேலும் உடைவதைத் தடுக்கவும், கட்சியின் வாக்கு வங்கியையும் செல்வாக்கையும் மீட்டெடுக்கவும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதே ஒரே வழி என்ற முடிவுக்கு தலைமை வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

இதன் தொடர்ச்சியாக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைத்து, அவருக்கு ‘இணைப் பொதுச் செயலாளர்’ பதவி வழங்குவது குறித்தும், அமமுகவை அதிமுகவுடன் முழுமையாக இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதேவேளையில், தனக்கு அளிக்கப்படும் பதவி அதிகாரம் மிக்கதாகவும், கட்சி முடிவுகளை எடுக்கும் பலம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் அதிமுகவில் உரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

   

அமமுகவைத் தொடர்ந்து, சசிகலாவையும் மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டுவருவது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இதில் முழு உடன்பாடு இல்லை என்றாலும், கட்சியின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் நிர்வாகிகளின் விருப்பத்திற்குச் சம்மதிப்பார் எனக் கூறப்படுகிறது. எனினும், இவை அனைத்தும் உட்கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் உலா வரும் தகவல்களே தவிர, சம்பந்தப்பட்ட தலைவர்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.