“‘அன்னைக்கு அப்படி.. இன்னைக்கு இப்படி”… விஜய் ரசிகர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல்?…இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!

By Nanthini on சித்திரை 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது அனல் பறந்து வரும் நிலையில், காரைக்குடியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே தனது உரைகளில் ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் விஜய், செல்லும் இடமெல்லாம் கூடும் இளைஞர் பட்டாளத்தை கையாள்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக, தங்களின் அபிமான நடிகரை ஒரு முறையாவது தொட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்கள் உயிரைப் பணையம் வைத்து வாகனங்களைப் பின் தொடர்வதும், விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. தஞ்சாவூரில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தலைமைப் பீடம் விடுத்த எச்சரிக்கைகளையும் மீறி ரசிகர்கள் இன்னமும் வேகமாகவே செயல்படுகின்றனர்.

காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ரசிகர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அவரது பிரச்சார வாகனத்தின் மீது ஏறி அவரை நெருங்க முயன்றனர். அப்போது பாதுகாப்பிற்காக இருந்த பவுன்சர்கள், வாகனத்தில் ஏற முயன்ற ரசிகர்களின் கைகளை ஷூ அணிந்த கால்களால் மிதித்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்தச் செயலை திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது ரசிகர்களைக் காவல் துறையினர் தாக்கியபோது, “என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்று மேடையில் முழங்கிய விஜய்யின் முன்னிலையிலேயே, அவரது பாதுகாவலர்கள் இவ்வாறு நடந்து கொண்டது முரண்பாடாக உள்ளதாகக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

   

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு இருவேறு பார்வைகள் நிலவுகின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவுமே பவுன்சர்கள் அவ்வாறு நடந்திருக்கக்கூடும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், “மக்களுக்காகத் தான் அரசியல்” என்று களம் இறங்கிய விஜய்யின் படையில், தொண்டர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டிய பொறுப்பு பாதுகாவலர்களுக்கு உண்டு என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த வைரல் வீடியோ மற்றும் விமர்சனங்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.