தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஊழல்” என்ற வார்த்தையைக் கேட்டாலே திமுகவினருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. எந்தவொரு கட்சியின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் “ஊழல்” என்று பொதுவாகக் கூறினாலே, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப திமுகவினர் தாங்களாகவே முன்வந்து பதற்றமடைவதாகத் தனது எக்ஸ் தளப் பதிவில் தவெக சுட்டிக்காட்டியுள்ளது. உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்ற உண்மையான கேள்விக்குப் பதில் அளிக்காமல், “ஊழல் என்ற வார்த்தையை ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள்?” என்று ஆளும்கட்சியினர் அலறுவது ஏன் என்றும், தப்பு செய்யவில்லை என்றால் “அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று நேர்மையாக மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்றும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவினரின் இந்தத் தொடர் பதற்றமானது, ஊழல் என்ற வார்த்தை அவர்களுக்கு எந்த அளவுக்கு அடியிலிருக்கும் பலவீனத்தைத் தொடுகிறது என்பதைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஊழல் செய்யவில்லையென்றால் பதற வேண்டிய அவசியம் என்ன?” என்று வினா எழுப்பியுள்ள தவெக, “ஊழல் இலக்கியமே! ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போச்சு!” எனக் காரசாரமாக எள்ளி நகையாடியுள்ளது. தமிழக அரசியல் களம் அடுத்தகட்டத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தவெகவின் இந்த அதிரடியான விமர்சனமும், அதற்கு திமுக அளிக்கப்போகும் பதிலடியும் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
