அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசனின் நகைச்சுவையான பேச்சுக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்பாராதவிதமாக பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், “நன்றாக இருக்கிறது” என்று கூறி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
செய்தியாளரின் கேள்வியை தவறாகப் புரிந்து கொண்டு அவர் அப்படிப் பதிலளித்ததை உணர்ந்த அடுத்த கணமே, “அதையா கேட்டீங்க… என்னப்பா நீங்க!” என்று கூறி சட்டெனச் சுதாரித்துக் கொண்டார். கூட்டணி மற்றும் தேர்தல் களத்தில் விஜய் கட்சி அதிமுகவிற்கு சவாலாக இருக்குமா என்ற விவாதம் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, திண்டுக்கல் சீனிவாசனின் இந்த எதார்த்தமான குளறுபடிப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, காரசாரமான அரசியல் சூழலிலும் நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
