கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. அதே சமயம் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு மன்னிப்பு கேட்டு விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே முதல் கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தன்னுடைய X தள பக்கத்தில், வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டு பிறகு அதனை நீக்கினார்.
இது தொடர்பாகவும் அவர் மீது காவல்துறையினர் வடக்கு பதிவு செய்த நிலையில் தற்போது அவருடைய வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு கரூர் காவல்துறையினர் வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறை விசாரணைக்கு தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தேவை என்று கோரி கடிதம் கொடுத்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் ஆதவ் அர்ஜுனா கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
