வரவிருக்கும் இடைத்தேர்தலில் பாமக ஆதரவைப் பெற தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றதற்கு பாமகவின் வாக்கு வங்கியே முக்கியக் காரணியாக அமைந்தது என்ற பேச்சு நிலவும் நிலையில், அக்கட்சியின் ஆதரவை உறுதிசெய்ய இரண்டு முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பைப் பலப்படுத்த பாமகவின் தயவு அவசியம் என்பதை உணர்ந்தே தவெக இந்த நகர்வை மேற்கொண்டு வருகிறது.
அதேவேளையில், தவெக கூட்டணியில் இணைவதற்கு சௌமியா அன்புமணி உட்பட பாமகவின் சில முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வந்தபோதிலும், அரசியல் ரீதியாக சில சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, அக்கூட்டணியில் ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிப்பது பாமக தலைமைக்கு மிகப்பெரிய நெருடலையும் யோசனையையும் கொடுத்துள்ளது. இரு கட்சிகளின் கொள்கை மற்றும் சமூக ரீதியான முரண்பாடுகள் காரணமாக, விசிக இருக்கும் கூட்டணியில் தவெகவுடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா என்பது குறித்து பாமக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
