தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், எக்சிட் போல் கணிப்புகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தங்களின் வெற்றி உறுதி என அதிரடி கிளப்பியுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் கணிப்பு நிறுவனங்கள் தவெக-விற்கு குறைந்த அளவிலான தொகுதிகளே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன. குறிப்பாக மேட்ரீஸ், மின்னம்பலம் போன்ற நிறுவனங்கள் ஒற்றை அல்லது இரட்டை இலக்க வெற்றியை மட்டுமே கணித்துள்ள நிலையில், தவெக தரப்பு இந்தத் தரவுகளை வெறும் கண்துடைப்பு என்று சாடியுள்ளது.
தவெக-வின் செய்தித் தொடர்பாளரும் ஆஸ்தான ஜோதிடருமான ராதன் பண்டிட், செய்தியாளர்களிடம் பேசுகையில் மிகவும் நம்பிக்கையுடன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள் கள யதார்த்தத்திற்கு மாறானவை; அவற்றை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய ‘ஸ்வீப்’ வெற்றியைப் பதிவு செய்யும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அக்கட்சி நடத்திய ரகசிய சர்வே முடிவுகளின்படி 140 முதல் 170 தொகுதிகளுக்கு மேல் தவெக வெற்றி பெறும் என்றும், சுமார் 45 சதவீத வாக்கு வங்கியைத் தங்களது கட்சி உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு மட்டும் தவெக-விற்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், ராதன் பண்டிட் ஒரு படி மேலே சென்று, “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 108 மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. சரியாக 109-வது மணிநேரத்தில், எங்கள் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பார்” எனத் தேதியுடன் அதிரடியான ஜோதிடக் கணிப்பை முன்வைத்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாகப் பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், தவெக முன்வைக்கும் இந்த அதீத நம்பிக்கை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. 85 சதவீத வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதும், புது வரவான தவெக ஆட்சிக் கட்டிலில் அமருமா அல்லது கணிப்புகள் சொல்வது போல எதிர்க்கட்சி வரிசையில் அமருமா என்பதும் வரும் மே 4-ஆம் தேதி தெரிந்துவிடும். தற்போது ராதன் பண்டிட் கூறியுள்ள அந்த “109-வது மணிநேர” மேஜிக்கிற்காகத் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
