சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் பல்வேறு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறினாலும், சில நிறுவனங்கள் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சாதகமான முடிவுகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, பீப்புல்ஸ் பல்ஸ் மற்றும் நியூஸ் 18 போன்ற நிறுவனங்கள் திமுக 120 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணித்துள்ள நிலையில், மேட்ரிக்ஸ் மற்றும் ஸ்பைக் மீடியா போன்ற அமைப்புகள் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில் முதல்முறையாகத் தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கணிப்புகள் தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் தவெக 4 முதல் 25 இடங்கள் வரை பெறும் எனக் கூறினாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் 98 முதல் 120 இடங்கள் வரை அக்கட்சி பெறும் என அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான ஸ்பைக் மீடியா, தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, தவெக 67 முதல் 91 இடங்கள் வரை பிடிக்கும் எனக் கணித்துள்ளது.
இந்த அதிரடி கணிப்புகளால் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அரசியல் புரட்சியைப் போல, விஜய்யும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மற்ற கருத்துக்கணிப்புகளைப் புறக்கணிக்கும் அவர்கள், ஆக்ஸிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்களின் முடிவுகளே கள நிலவரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, “விஜய் தான் அடுத்த முதல்வர்” என்ற முழக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது திமுக மற்றும் தவெக தரப்பினர் தத்தமது வெற்றிக் கணிப்புகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், அதிமுக தரப்பு சற்று அமைதி காத்து வருகிறது. பல்வேறு முரண்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் உலாவந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் அரியணையில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கு வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரப்பூர்வ விடை கிடைத்துவிடும். அதுவரை தமிழக அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
