தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் விடுத்த அழைப்பைத் தவெக தரப்பு அதிரடியாக நிராகரித்துள்ளது.
இது குறித்துத் தவெகவின் முக்கிய நிர்வாகியான அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழருவி மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. எங்களது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்குத் தெளிவு இருக்கிறது; அவரது அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “யாருக்கு அறிவுரை தேவையோ, அவருக்கு மட்டும் அவர் அறிவுரை வழங்கினால் போதும்” என்று தமிழருவி மணியனின் கருத்துக்குக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பெரும்பான்மை பெறுவதையே இலக்காகக் கொண்டு தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், தவெக நிர்வாகியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
