திண்டுக்கல் மாவட்டம் பெரியமல்லணம்பட்டி கிராமத்தில், ஒருவரது வீட்டின் அனுமதியின்றி கட்டப்பட்ட அரசியல் கட்சி கொடியை அகற்றிய விவகாரம் மோதலில் முடிந்துள்ளது. முருகன் என்பவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், அவரது தாய் பாண்டீஸ்வரி மற்றும் பெத்துராஜ் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றியுள்ளனர். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த கொடியை முருகன் கழற்றியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரைத் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி ரீதியாகவும் இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட முருகன் இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சட்டவிரோதமாக மிரட்டல் விடுத்தது மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாய், மகன் மற்றும் அவர்களது நண்பர் என மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசியல் கொடி விவகாரத்தில் ஜாதி மோதலைத் தூண்டும் வகையில் நடந்த இந்தச் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
