அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பெண்மணி ஒருவர், எதிர்பாராத விதமாகத் தனது தங்க மூக்குத்தி நுரையீரலில் சிக்கியதால் பெரும் அவதிக்குள்ளானார். மூச்சுக்குழாய் வழியாக உள்ளே சென்ற அந்தத் திருகாணி, அவரது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில், மூக்குத்தி நுரையீரலில் எங்கே சிக்கியுள்ளது என்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூத்த மருத்துவர் பால கலைக்கோவன் தலைமையிலான குழுவினர் ‘பிராங்கோஸ்கோப்பி’ (Bronchoscopy) எனப்படும் நவீன நுரையீரல் உள்நோக்கு கருவியைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை இன்றி அந்தத் தங்க மூக்குத்தியைப் பாதுகாப்பாக அகற்றினர். இதற்கு முன்பு நிலக்கடலை, பென்சில், ஊக்கு போன்ற பொருட்களை அகற்றியிருந்தாலும், தங்கத்திலான பொருளை நுரையீரலில் இருந்து மீட்பது இதுவே முதல்முறை என்று மருத்துவர் தெரிவித்தார். வாயில் அல்லது மூக்கில் ஏதேனும் பொருட்கள் இருக்கும்போது புறையேற்றம் ஏற்பட்டால் இது போன்ற விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
