“ரூ. 152 கோடி Vs ரூ. 68 லட்சம்”… கோடீஸ்வர எம்எல்ஏக்கள் எந்த கட்சியில் அதிகம்… வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்எல்ஏக்களில் (விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் கணக்கிடப்பட்ட எண்ணிக்கை) சுமார் 193 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் 32 சதவீதத்தினர் ரூ. 10 கோடிக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ளனர். 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 12 கோடியிலிருந்து ரூ. 48 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சி வாரியாகப் பார்க்கையில், ஆளுங்கட்சியான திமுகவில் வெற்றி பெற்ற 59 பேரில் 57 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் வெற்றி பெற்ற 47 பேரில் 44 பேர் கோடீஸ்வரர்கள். புதிதாக களம் கண்டு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், வெற்றி பெற்ற 107 பேரில் 77 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இது அக்கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் 72 சதவீதமாகும். அதேவேளையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெற்றி பெற்ற தலா இரண்டு வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

   

சராசரி சொத்து மதிப்பைப் பொறுத்தவரை, அதிமுக எம்எல்ஏக்கள் ரூ. 152.89 கோடியுடன் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 27 கோடியாகவும், காங்கிரஸின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 17 கோடியாகவும் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களைக் கொண்டிருந்தாலும், திமுக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 14 கோடியாக மட்டுமே உள்ளது. பாமக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 22 கோடியாக பதிவாகியுள்ளது.

   

மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர்களாக இடதுசாரி மற்றும் விசிக எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் சராசரி சொத்து ரூ. 4 கோடியாகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களுடையது ரூ. 4.4 கோடியாகவும் உள்ளது. பட்டியலிலேயே மிகக் குறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 89 லட்சமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் மதிப்பு ரூ. 68 லட்சமாகவும் உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழக அரசியலில் நிலவும் பொருளாதாரப் படிநிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.