தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. காலம் காலமாக நீடித்து வந்த திமுக, அதிமுக இடையேயான நேரடிப் போட்டி மறைந்து, தற்போது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களை நோக்கியே அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே தினசரி கடுமையான வாக்குவாதங்களும், அரசியல் மோதல்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தவெகவை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தவெக எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன் தற்பொழுது கொடுத்துள்ள அதிரடி பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன், தவெக தொண்டர்களுக்குக் கடுமையான அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்தார். “நமது கட்சித் தலைவர் விஜய் அவர்களுக்குப் பேனர் வைப்பது சற்றும் பிடிக்காது. பொதுமக்களுக்குத் தொந்தரவாகப் பேனர்கள் வைப்பதாகப் புகார்கள் வருகின்றன. நமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நாம் எந்தக் இடையூறும் செய்யக் கூடாது. நம்முடைய தவறுகளால் ஏற்படும் எந்தக் குறையும் நேரடியாக முதலமைச்சர் மீதுதான் பாயும். எனவே, கட்சியினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தவெக பெயரைக் கெடுக்கும் வகையில் மாமூல் வசூலிப்பவர்கள் மற்றும் பள்ளிகளில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சொந்தப் பணத்தில் நலத்திட்டங்களைச் செய்யும் தார்மீகப் பொறுப்பு தவெகவிற்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்குத் தவெக அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சரவணன், மக்களின் தெளிவான ஆதரவோடு இந்த 5 ஆண்டுகள் மட்டுமன்றி, இனி வரும் காலங்களிலும் தமிழகத்தில் தவெக ஆட்சிதான் தொடரும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தவெக பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையோடு கூறினார். மக்கள் தவெக பக்கமே இருக்கிறார்கள் என்பதால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தவெகவின் அசைக்க முடியாத பலத்தை மீண்டும் நிரூபிக்கும் களமாக அமையும் என்றும் அவர் மேடையில் முழங்கினார்.
இறுதியாக, “உள்ளாட்சித் தேர்தலில் தவெக ஒரு மாநகராட்சியில் வென்றால் கூட என்னுடைய ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விட்டிருந்ததற்கு சரவணன் மிகக் கடுமையான பதிலடி கொடுத்தார். “அண்ணே ஆர்.எஸ்.பாரதி அண்ணே, சேவிங் பிளேடு மற்றும் சேவிங் செட்டை இப்போதே வாங்கித் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஆலந்தூரிலேயே நாங்கள் உங்களுக்காக அதை வாங்கி வைத்துவிட்டோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் தவெக அமோக வெற்றி பெறும். அதன் பிறகு அந்த சேவிங் செட்டை உங்கள் கையில் கொடுப்போம், நீங்கள் மீசையை எடுக்கத்தான் போகிறீர்கள்” என்று ஈசிஆர் சரவணன் சவாலுக்குச் சவால் விட்டுப் பேசியுள்ளது தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
