உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த மூத்த ரயில்வே பொறியாளர் முகேஷ் குமார் திவாரி (58) என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரயில்வேயில் மூத்த பிரிவு பொறியாளராகப் பணிபுரிந்து வந்த திவாரி, கடந்த பல மாதங்களாகக் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பித்து வந்தார். இந்நிலையில், ஆலம்பாக்கில் உள்ள ரயில் பெட்டி பழுது பார்க்கும் பட்டறைக்கு அருகே அவர் நடமாடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகேஷ் குமார் திவாரியின் மகன் அபிஷேக் திவாரியுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான முதல் நாளில் இருந்தே அந்த பெண் கடுமையான வரதட்சணைக் கொடுமைகளையும், உடல் ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளார். கடந்த 2024, ஏப்ரல் 20 அன்று பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பிய அந்த பெண்ணிற்கு, மாமனார் முகேஷ் குமார் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரை மூன்று நாட்களாக ஒரு அறையில் சிறைவைத்துத் தொடர்ந்து துன்புறுத்திய நிலையில், அங்கிருந்து தப்பிய இளம்பெண் காவல்துறையைத் தொடர்பு கொண்டு தன்னை மீட்டதாகத் தனது புகாரில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் மேலும் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருமணத்தன்று நடந்த விருந்தின் போது நாத்தனார்களால் வலுக்கட்டாயமாக மது அருந்த வைக்கப்பட்டதாகவும், சிகரெட் துண்டுகளால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கணவரும் நாத்தனார்களும் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து நடத்தும் பார்ட்டிகளில் தன்னை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாகவும், இதுகுறித்து மாமனாரிடம் முறையிட்டபோது அத்தகைய விருந்துகள் “பணக்காரர்களின் பொழுதுபோக்கு” என்று அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
