தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தென் மண்டல கவுன்சிலுக்கான தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் தலைவராகச் செயல்படும் இந்த தென் மண்டல கவுன்சிலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதே இக்கவுன்சிலின் முதன்மை நோக்கமாகும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், பள்ளிக் கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இந்த கவுன்சிலின் தமிழக பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருடன் சேர்ந்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசனும் ஆலோசகராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட நியமனங்களுக்குப் பதிலாக, இந்த புதிய உறுப்பினர்களுக்கான அரசாணை ஜூலை 17 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
