அதிமுகவிற்கு எடப்பாடி வைத்த செக்?…. சபாநாயகர் முன் நேருக்கு நேர் மோதப் போகும் இபிஎஸ் – 4 எம்எல்ஏக்கள்…. ஜூலை 30-ல் வெடிக்கப் போகும் குண்டு….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் சாயத் தொடங்கியிருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த இசக்கி சுப்பையா, பி. சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர். அவர்களுக்குத் தவெகவின் உறுப்பினர் அடையாள அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட்டன.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவெகவினர் ‘குதிரை பேரம்’ நடத்தித் தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். கட்சி மாறிய அந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனச் பேரவைத் தலைவரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சம்பந்தப்பட்ட 4 முன்னாள் எம்எல்ஏக்களையும் நேரில் அழைத்து இரண்டு முறை விசாரணை நடத்தி அவர்களது விளக்கங்களைப் பெற்றுள்ளார்.

   

இந்நிலையில், விசாரணை தொடர்பாகவும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் அளித்த பதில்கள் குறித்தும் தமக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்குத் தற்போது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கட்சி மாறுதல் தடைச் சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதால், இருதரப்பினரையும் நேருக்கு நேர் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இதன்படி, வரும் ஜூலை 30-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் சபாநாயகர் அறையில் நடைபெறவுள்ள நேரில் ஆஜராகும் விசாரணையில், கட்சி மாறிய 4 முன்னாள் எம்எல்ஏக்களுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து தமது தரப்பு வாதங்களையும் விளக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்த இந்த 4 பேரையும் சட்டப்பூர்வமாகத் தகுதிநீக்கம் செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கும் நிலையில், வரவிருக்கும் இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.