அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேயான விமர்சனக் கணைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தவெகவால் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியாது என்பதால் தவெகவிடமிருந்துதான் மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தவெக அரசு நிர்வாகத் திறனற்ற அரசு என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான விளக்கமளித்துள்ளது. தவெக ஆட்சியில் தான் காவல்துறை முழு சுதந்திரத்துடன், ‘காவல்துறையாக’ச் செயல்பட்டு வருவதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குற்றச்சம்பவங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றைத் தடுக்க முதலமைச்சர் விஜய் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் விளம்பரச் படப்பிடிப்புகள் நடத்துவதிலும், சமூக வலைதளப் பிரபலங்களுடன் ரீல்ஸ் பதிவிடுவதிலும் தான் கவனம் செலுத்தினார் எனத் தவெக விமர்சித்துள்ளது. அரக்கோணம் மாணவி விவகாரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு மற்றும் அண்ணா நகர் சிறுமி வழக்கு போன்ற திமுக காலத்துச் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டு அச்சுறுத்தும் போக்கு அப்போதுதான் நிலவியது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவெக ஆட்சியில் தயவுதாட்சணியின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் முறையாக விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தற்போதுதான் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ள தவெக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான முதலமைச்சராக வெற்றித் தலைவர் விஜய் செயல்பட்டு வருவதாகத் தன் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
