திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒண்டி குடிசை பகுதியை சேர்ந்த 61 வயதான மூதாட்டி மலர் கிடைக்கும் வேலையை செய்து அன்றாடம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பக்கத்தில் உள்ள ஊருக்கு போக பைக்கில் வந்தவர்களிடம் அவர் உதவி கேட்டுள்ளார். அந்த வழியாக வந்த கௌதம் என்ற வாலிபர் மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் போக வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திய கௌதம் இதற்கு மேல் பைக் போகாது என்று கூறியுள்ளார். அப்போது திடீரென்று மூதாட்டி யின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் பறந்துவிட்டார்.
இதனை எதிர்பார்க்காத மூதாட்டி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். ஆனால் அது ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து மூதாட்டி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை பதிவு செய்தனர். அதில் பைக் போன பாதையை வைத்து மேற்கொண்ட விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கௌதம் என்பதும் அவர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகையை மீட்டு மூதாட்டி இடம் ஒப்படைத்தனர். விஜயின் கட்சி நிர்வாகி ஒருவர் செயின் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
