தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவிலிருந்து இணைந்த மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளும் தொகுதி ஒதுக்கீடுகளும் அள்ளி வழங்கப்பட்டதால், அக்கட்சியின் ஆரம்பக்கால நிர்வாகிகளிடையே அதிருப்தியும் உட்கட்சி மோதலும் வெடித்துள்ளது. குறிப்பாக, மடத்துக்குளம் தொகுதி சி.மகேந்திரனுக்கும், உடுமலைப்பேட்டை தொகுதி உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் ஒதுக்கப்பட்டதால், அங்குள்ள தவெக மாவட்டச் செயலாளர் திருமலை எவ்வித அதிகாரமும் இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
அதேபோல கடலூர் தொகுதி அதிமுகவின் எம்.சி.சம்பத் வசம் சென்றதால், அமைச்சர் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் தவெகவில் தேர்தலுக்கு முன் கட்சிக்கு உழைத்தவர்கள், தேர்தலுக்கு பின் வந்தவர்கள் என இரு அணிகளாகப் பிரிந்து, கட்சி உடைவை நோக்கிச் செல்வதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
