தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவரும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண் ஒருவரைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணிடம், “எங்களுக்குத் த.வெ.க. மேலிடத்திலும், அமைச்சர்களிடமும் நல்ல செல்வாக்கு உள்ளது; நிச்சயம் அரசு வேலை வாங்கித் தருகிறோம்” என்று கூறி ஆசைவார்த்தை பேசி நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண்ணும் அரசு வேலைக்காக அவர்களிடம் பெருமளவு பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அரசு வேலை தொடர்பாகப் பேச வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை இருவரும் தங்களது காரில் அழைத்துச் சென்று, ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அங்கு வேலை குறித்துப் பேசுவது போல் நடித்து, அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் தந்திரமாக மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். மயக்கமடைந்த அந்தப் பெண்ணை பாலமுருகனும், ஜெயபாலும் சேர்ந்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த இளம் பெண், தான் சீரழிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினரின் உதவியோடு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக, குற்றச் சம்பவம் நடைபெற்ற ஏர்வாடி தனியார் விடுதியின் சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சோதனை செய்ததில், இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அந்தப் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்றது ஆவணப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த த.வெ.க. நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
