தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை (118 தொகுதிகள்) கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் தவெக தனது ஆட்சியை அமைத்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடையும் நிலையில், அரசின் சில திட்டங்களுக்கு வரவேற்பு இருந்தாலும், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் மீதான அரசியல் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.
சட்டமன்றத்தில் தவெகவுக்கு நிலையான பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியை தடையின்றி முழுமையாகத் தொடர மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும் 6 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் மேலும் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் உள்ள மொத்தம் 47 எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டோரை தங்கள் பக்கம் கொண்டுவர தவெக காய்நகர்த்தி வரும் வேளையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தியிலுள்ள முன்னாள் மூத்த அமைச்சர்கள் வழியே பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதேவேளையில், தவெக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், வழக்கிற்குத் தேவையான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஆட்சியின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய 118 தொகுதிகள் என்ற இலக்கை எட்ட தவெக வியூகம் வகுத்து வருகிறது. அதிமுகவை தொடர்ந்து, தற்போது 59 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள திமுக மீதும் தவெகவின் பார்வை திரும்பியுள்ளது அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திமுகவில் பதவி பறிப்பு மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதிக்கத்தால் அதிருப்தியில் இருக்கும் 5 எம்எல்ஏக்களைக் கண்டறிந்து, முதல்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து அவர்கள் கட்சி மாறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
