“பேசவே அசிங்கமா இல்லையா?…. வன்மத்தின் உச்சம் செங்கோட்டையன்”…. கொந்தளித்த டிடிவி தினகரன்…. அரசியலில் அடுத்த பூகம்பம்…!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகப் பேசினார். மேலும், அதிமுகவின் நிலைமை எதிர்காலத்தில் மதிமுகவைப் போல் மாறிவிடும் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். செங்கோட்டையனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செங்கோட்டையனின் பேச்சை கடுமையாகச் சாடினார். எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுகவின் தொண்டராக இருந்து, ஜெயலலிதா தலைமையின் கீழ் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன் என்பதை சுட்டிக்காட்டிய தினகரன், “அடையாளம் தந்த கட்சியையே யாரோ சிலர் மீதான கோபத்தில் அழிய வேண்டும் எனப் பேசுவது வன்மத்தின் உச்சம்” எனத் தெரிவித்தார்.

   

மேலும் தொடர்ந்த தினகரன், செங்கோட்டையனுக்கு உலகளவில் முகவரியையும் அங்கிகாரத்தையும் கொடுத்ததே அதிமுக இயக்கம் தான் என்றார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் தவெகவில் இணைந்து அமைச்சராகியிருக்கலாம், ஆனால் தான் வளர்ந்த இயக்கத்தையே முற்றிலும் அழிக்க நினைக்கும் அளவிற்கு செங்கோட்டையன் வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் எனத் தான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

   

அதிமுகவிலிருந்து மேலும் 10 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று செங்கோட்டையன் கூறிய கூற்றையும் தினகரன் அடியோடு மறுத்தார். ஆட்சி அமைப்பதற்காகச் சராசரி அரசியலை விடக் கீழ இறங்கி, அமமுகவின் ஒரே ஒரு எம்எல்ஏவிடம் கூட பேரம் பேசியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், புதிய கட்சிக்குத் தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் செங்கோட்டையனின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி என்றும் விமர்சித்தார்.