செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டிய காரில் ஒரு கும்பல் வந்துள்ளது. அங்கிருந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநரான அழகுதுரை (32) என்பவரிடம், அந்த காண்டிராக்டரின் தொலைபேசி எண்ணை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தவெக நிர்வாகி ஜெய்சங்கர் (என்ற ஜெய்) மற்றும் அவரது கூட்டாளிகள் ஓட்டுநரைத் தாக்கி, கடத்தப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
பொக்லைன் ஓட்டுநர்கள் சங்கம் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட தொழிலாளி அழகுதுரை அளித்த புகாரின் அடிப்படையில், பீர்க்கன்காரணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தவெக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்ட உடனே, கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பொறுப்பில் இருந்த ஜெய்சங்கர், கட்சியின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, அவரது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
