ஆங்கிலேயர்கள் போட்ட தப்பு கணக்கு… இந்தியா – நேபாள எல்லையில் இத்தனை ஆண்டுகாலமாக நடக்கும் கூத்து இதுதானா?… பிரதமர் பாலன் ஷா சொன்ன ‘அந்த’ ஒரு உண்மை….!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பாலன் ஷா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய கருத்து ஒன்று பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. “நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகுதான் ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்துகொண்டேன்; இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் பல இடங்களில் இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளது” என்று அவர் பேசியது, நேபாளத்திற்குள்ளேயே அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் நண்பர்களாக அமர்ந்து உண்மைகளை ஆராய்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அங்கு வலியுறுத்தினார்.

   

பிரதமரின் இந்தத் திடீர் ஒப்புதல் வாக்குமூலம் நேபாள அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உடனடியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. பிரதமர் ‘ஆக்கிரமிப்பு’ எனக் குறிப்பிட்டது அதிகாரப்பூர்வ நிலப்பரப்புரிமையை அல்ல என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது. இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட ‘நோ-மேன்ஸ் லேண்ட்’ (No Man’s Land) எனப்படும் மனிதர்கள் நடமாடக் கூடாத எல்லைக் கோட்டுப் பகுதி மற்றும் எல்லைத் தூண்கள் சேதமடைந்துள்ள சில இடங்களில், இரு நாட்டு விவசாயிகளும் எல்லையைக் கடந்து விவசாயம் செய்வதைக் குறிப்பிட்டுத்தான் பிரதமர் அவ்வாறு பேசினார் என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

   

இந்தப் எல்லைப் பிரச்சனை என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே நீடித்து வருவதால், இதில் பிரிட்டன் அரசாங்கமும் அக்கறை காட்ட வேண்டும் எனப் பிரதமர் பாலன் ஷா வலியுறுத்தியுள்ளார். வரலாற்றுரீதியான இந்த விவகாரம் குறித்து இந்தியா, சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுடனும் நேபாள அரசு ஏற்கனவே தூதரக ரீதியாகப் பேசியுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும், எல்லையை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது என்ற பிரதமரின் வார்த்தைகள் சர்வதேச அளவில் நேபாளத்தின் நிலப்பாட்டைப் பலவீனப்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

 

இதன் காரணமாக, நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நேபாளம் ஒருபோதும் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர்கள், பிரதமர் தனது பேச்சுக்கு முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டுத் தனது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்சமயம் நேபாளத்தில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.