தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற செய்தி, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கசிந்த இந்தத் தகவல், நீண்டகாலமாக விஜய்க்காக உழைத்து வரும் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிர்வாகிகளுக்குச் சீட் வழங்கப்படாது என்றும், அங்கு தலைமை அறிவிக்கும் வேட்பாளரை விஜய் என நினைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கட்சி தொடங்குவதற்கு முன்பே தங்களின் சொந்தப் பணத்தைச் செலவழித்து நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்த தங்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதை மாவட்டச் செயலாளர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கட்சியை விட்டு கூண்டோடு விலகத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியவர்களே வெளியேற முடிவெடுத்திருப்பது தவெக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மற்ற அரசியல் கட்சிகளுக்குத் தாவவும் அவர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் தகவல், கட்சியின் தலைவர் விஜய்க்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படச் சிக்கல், தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னெல் விவகாரம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் என அடுத்தடுத்த சர்ச்சைகளில் விஜய் சிக்கி வரும் நிலையில், இந்த உட்கட்சிப் பூசல் தவெகவின் தேர்தல் வியூகங்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்வதா அல்லது புதிய வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதா என்ற இக்கட்டான சூழலில் தவெக தலைமை உள்ளது.
