தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த வைகோவின் சமத்துவ நடை பயணத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் திமுகவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற கருத்து மேலும் வலுவடைந்துள்ளது. இது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய நிலையில் கூட்டணி பற்றி கட்சியின் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என்று பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் ஏறத்தாழ காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்வதாக தெரிகிறது.
