தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநரின் இந்தத் தாமதத்தைக் கண்டித்தும், சட்டரீதியாகத் தங்கள் உரிமையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க தலைமை முடிவு செய்துள்ளது. ஆளுநரின் முடிவிற்காகக் காத்திருக்காமல், நீதித்துறையின் மூலம் விரைவான தீர்வைப் பெற அக்கட்சித் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த சட்டப் போராட்டத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அடிப்படையாக வைத்து வாதாட த.வெ.க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் கலைப்பது அல்லது ஆட்சி அமைக்கக் கோருவது தொடர்பான அந்தத் தீர்ப்பின் வழிகாட்டுதல்களை முன்வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அக்கட்சி தயாராகி வருகிறது.
