தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. முதல்வர் விஜய் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தினசரி செயல்பாடுகளை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பே முழுமையாகக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டுமானால் வலுவான கட்சி கட்டமைப்பு அவசியம் என்பதை உணர்ந்தே, அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் தவெகவிற்கு வர வேண்டும் என்ற அழைப்புகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், தவெக தற்போது மூன்று பிரதான அணிகளாகப் பிரிந்து நிற்பது கட்சித் தலைமைக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆரம்பகால விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு அணியாகவும், கட்சி தொடங்கப்பட்டபோது இணைந்தவர்கள் மற்றொரு அணியாகவும், அதிமுகவிலிருந்து விலகி வந்தவர்கள் மூன்றாவது அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பிற்கும் இடையே எழும் உட்கட்சி மோதல்களைச் சரிசெய்ய முடியாமல் தலைமை திணறி வரும் சூழலில், நள்ளிரவுப் பேச்சுவார்த்தைகள் மூலமாகப் பிரச்சனைகள் தற்காலிகமாக மட்டுமே சமாதானம் செய்யப்படுவதாகக் குமுறல்கள் எழுந்துள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போஸ்டர், பேனர் ஒட்டுவது முதல் டெண்டர் விவகாரங்கள் வரை கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் மற்றும் பிற முக்கியப் பதவிகளுக்கு யாரை நிறுத்துவது என்பதில் இந்த மோதல் வெளிப்படையாக வெடிக்கும் என்றும், கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மாவட்ட வாரியாக இவ்வளவு உள்கட்சிப் பூசல்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், முதல்வர் விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருவதைக் குறைத்துக் கொண்டு அமைதி காப்பதாகக் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்டமைப்பில் வலுவாக இருக்கும் திமுக மற்றும் அதிமுகவை எதிர்கொள்ள வேண்டுமானால், தவெக தலைமை உடனடியாகத் தலையிட்டு இந்த உள்கட்சிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது மிகவும் அவசியமாகும்.
