“நீயெல்லாம் ரிப்போர்ட்டரா?.. இல்ல ரவுடியா?”… நடுரோட்டில் நாவைக் துருத்திய ADSP…. நள்ளிரவில் தூத்துக்குடியில் பரபரப்பு..!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை அச்சுறுத்தும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சரை ஏகவசனத்தில் விமர்சித்ததோடு, சட்டமன்றத்தில் வைத்து அவரது எலும்புகளை உடைப்போம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த அவதூறு மற்றும் மிரட்டல் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பிஎன்எஸ் (BNS) சட்டத்தின் 351(3), 352, 353(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மார்க்கண்டேயனை உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

   

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பின்புற வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களைப் பார்த்த மார்க்கண்டேயன், காவல்துறையினர் தன்னைக் கொல்வதற்கு முயற்சிப்பதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும் கூச்சலிட்டபடி சென்றார். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

   

இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ-விடம் செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களிடம் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி. திபு நடந்துகொண்ட விதம் மற்றொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. செய்தியாளர்களைப் பார்த்து நாக்கை துருத்தி, “நீங்கள் பத்திரிகையாளர்களா அல்லது ரவுடிகளா?” எனக் கூறி ஒருமையில் பேசி, அவர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தார். காவல்துறையினரின் இந்த வரம்புமீறிய நடவடிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுடனான தள்ளுமுள்ளு சம்பவம் ஊடகவியலாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.