ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஈரான் நாட்டை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடுமையான மிரட்டலுக்கு, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் நூதனமான முறையில் பதிலடி கொடுத்துள்ளது. தங்களது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில், பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிரடி சண்டைக் காட்சி ஒன்றைப் பகிர்ந்து டிரம்பின் பேச்சை அவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஈரான் தூதரகம் பகிர்ந்த அந்த 58 விநாடி வீடியோவில், ஆயுதம் ஏந்திய பலரை நடிகர் பாலகிருஷ்ணா கேடயத்தை வைத்துத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு அதிரடியாகத் தாக்குதல் நடத்தும் மாஸ் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவுடன், “ஈரானை அழிப்பதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் ஈரான் ஒன்றும் தற்காப்பற்ற நாடு அல்ல என்பது அவருக்குத் தெரியும்; அமெரிக்கர்கள் தற்போது ஹாலிவுட் படங்களுக்குப் பதிலாக பாலிவுட் படங்களை அதிகம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். தெலுங்கு திரைப்படமான இதனை பாலிவுட் என அவர்கள் தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தாலும், இணையவாசிகள் மத்தியில் இந்த பதிவு பெருமளவில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதா அல்லது அந்த நாட்டை முற்றிலுமாக அழிப்பதா என்ற மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகக் கடுமையாக எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு முன் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்று உறுதியளித்தார். இத்தகைய தீவிரமான உலகளாவிய அரசியல் மோதல்களுக்கு நடுவே, ஈரான் தூதரகம் இந்திய சினிமா காட்சியைக் கொண்டு அமெரிக்காவை ட்ரோல் செய்திருப்பது சர்வதேச அரசியலில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
