ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடியான மெயின்பால் தில்லா, தனது கம்போடியக் காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் 12 மணி நேர பரோலில் வெளியே வந்துள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவருக்கு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. ஜஜ்ஜார் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், இந்து முறைப்படி மெட்டா சான் என்ற கம்போடிய நாட்டுப் பெண்ணுடன் இவரது திருமணம் நடைபெறுகிறது. இவர் மீண்டும் தப்பிச் செல்வதைத் தடுக்க, திருமணம் நடைபெறும் இடத்தைச் சுற்றி ஆயுதம் ஏந்திய ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மெயின்பால் தில்லா மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆயுதக் கடத்தல் உட்பட 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஹிசார் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்தபோது மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார். பின்னர், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று கம்போடியா நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு தனது பெயரை மாற்றிக்கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கிய அவர், மெட்டா சான் என்பவருடன் இணைந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார்.
தலைமறைவான இவரைப் பிடிக்க ஹரியானா காவல்துறையினர் சிபிஐ உதவியுடன் இன்டர்போல் அமைப்பின் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பித்தனர். அதனடிப்படையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கம்போடிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட தில்லா, தற்போது தனது குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ள காதலியை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்யவே இந்த 12 மணி நேர பரோலை பெற்றுள்ளார். திருமணம் முடிந்தவுடன் அவர் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
