அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை (Pope) லியோ XIV ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள மோதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளைக் கண்டித்த திருத்தந்தை, “தன்னல வழிபாட்டையும் வன்முறையையும் கைவிடுங்கள்” என்று அறிவுறுத்தினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டிரம்ப், திருத்தந்தையை “குற்றவாளிகளிடம் மென்மையானவர்” என்றும், “வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்” என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். தான் அதிபராக இல்லாவிட்டால் லியோ திருத்தந்தையாகியிருக்க முடியாது என்றும் அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மோதலின் உச்சகட்டமாக, டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் டிரம்ப் இருப்பது போலவும், அவர் ஒரு நோயாளியைத் தொட்டு குணப்படுத்துவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஏஐ இயேசு’ படத்தைச் சுற்றி அமெரிக்கக் கொடிகள் மற்றும் ராணுவ விமானங்கள் இருப்பது போன்ற பின்னணி அமைக்கப்பட்டிருந்தது. புனிதமான மத அடையாளங்களை அரசியல் லாபத்திற்காக டிரம்ப் பயன்படுத்துவதாகக் கூறி, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டிரம்ப்பின் இந்தச் செயலை ஈரானிய அதிபரும் கடுமையாகச் சாடியுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் தன்னைத் தானே கடவுளாகச் சித்தரித்துக் கொள்வது அவரது அதிகார மமதையைக் காட்டுகிறது என்றும், இது மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையில், அந்தப் புகைப்படத்தில் டிரம்ப் குணப்படுத்தும் நபர் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் போல இருப்பதாக இணையதளங்களில் கேலிச்சித்திரங்கள் பரவியதைத் தொடர்ந்து, டிரம்ப் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இருப்பினும், திருத்தந்தைக்கும் டிரம்புக்கும் இடையிலான இந்த “அதிகாரப் போர்” இன்னும் தணிந்தபாடில்லை.
