“என் வளர்ச்சியை பிடிக்கவில்லை”… விஜய் டிவி பிரபலங்கள் மீது திவாகர் காவல்நிலையத்தில் புகார்.. குக் வித் கோமாளி செட்டில் பரபரப்பு..!!!

By Rajeshwari on சித்திரை 14, 2026

Spread the love

பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ செட்டில் தன்னை சக கலைஞர்கள் தாக்கியதாக, ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் திவாகர் சுமத்தியுள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற திவாகர், குக் வித் கோமாளி படப்பிடிப்பின் போது கானா வினோத் தன்னை உருவக் கேலி செய்ததாகவும், அது வாக்குவாதமாக மாறியபோது புகழ், கானா வினோத் மற்றும் ஒரு ஜிம் பயிற்சியாளர் தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாகாபா ஆனந்த் போதையில் இரும்பு ராடால் தன்னைத் தாக்கியதில் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தடுக்க வந்த அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோருக்கும் அடி விழுந்ததாகவும் திவாகர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நஸ்ரத்பேட்டை காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் திவாகர் புகார் அளித்துள்ளார். தனது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டுத் திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் ஆடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

   

இந்தப் புகாரைத் தொடர்ந்து கானா வினோத் மற்றும் புகழ் ஆகியோர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மற்ற கலைஞர்களிடமிருந்து இன்னும் முறையான விளக்கங்கள் வரவில்லை.