ஈரான் தொடுத்துள்ள வியூகப் போரினால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். ஈரான் தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரானின் தொடர் தாக்குதலால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் காலியானதே ட்ரம்ப் பின்வாங்கியதற்கான உண்மைப் பின்னணி என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈரானின் குறைந்த செலவிலான ஆளில்லா ட்ரோன்களை அழிக்க, அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ‘பாட்ரியாட்’ ஏவுகணைகளைச் செலவிட்டு தனது ஆயுத இருப்பைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலைப் பாதுகாக்கும் அளவுக்குத் தங்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்றும், நிலைமை நீடித்தால் இஸ்ரேலைக் கைவிட நேரிடும் என்றும் ஐரோப்பாவிற்கான அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்துள்ள செய்தி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உலகின் முக்கிய எண்ணெய் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்தத் தற்காப்புத் தாக்குதலும், அமெரிக்காவின் ராணுவப் பற்றாக்குறையும் உலக அரங்கில் அமெரிக்க வல்லரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
