“ஏலே எல்லாம் இங்க பாருங்கலே”…. ஹார்முஸ் ஜலசந்தியை தூக்கிய வாஷிங்டன்?…. உலக நாடுகளை அதிரவைத்த ட்ரம்பின் ‘ட்ரூத்’ பதிவு…. சீறும் ஈரான்…..!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான மோதல்ப் போக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனக் காட்டும் வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 15 அன்று இந்த நீர்வழிப்பாதையை அமெரிக்கப் பிராந்தியமாக அறிவித்த அவர், ஆகஸ்ட் 18-ல் முதன்முதலில் பகிர்ந்த அதே புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரானை முழுமையாகத் தோற்கடித்த பிறகு விரைவில் ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி அறிவிப்புகளுக்கு ஈரான் நிர்வாகம் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி, தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்கும் என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை தொடர்ந்து டெஹ்ரானின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வாஷிங்டன் தனது நடத்தையை திருத்திக்கொண்டு, முதலில் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

   

அமெரிக்கா நேரடியாக ராணுவ நடவடிக்கைகளில் இறங்காமல், ஈரானுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை மட்டுமே முதன்மை ஆயுதமாக நம்பியிருப்பதாக ரெசாய் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதாரத் தடைகள் மூலம் டெஹ்ரானை சரணடையச் செய்ய முடியும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபருக்கு உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது சில மாதங்கள் பொருளாதாரத் தடையை தீவிரமாக விதித்தால் ஈரான் பணிந்துவிடும் என்று நெதன்யாகு கணக்கு போடுவதாகக் குறிப்பிட்ட ரெசாய், ராணுவத் தாக்குதல்கள் தோல்வியடைந்ததால் அமெரிக்கர்கள் ஏமாற்றமடைந்து பொருளாதாரத் தடைகளை நம்பத் தொடங்கியுள்ளனர் என்றார்.

   

சர்வதேச அளவில் ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவை அவர் நாடி வருவதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரத்தில், பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத் தடைகளை மீறி எண்ணெய் விற்பனை செய்வதில் ஈரான் போதிய அனுபவம் பெற்றுள்ளதால், தடைகளைத் தாண்டி பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறது. மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஈரான் விரும்புவதாகவும், போரைத் தூண்டுபவர்களை தீவிரமாக எதிர்ப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஈரானிய இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்க வேண்டும் என்றும் ரெசாய் அழைப்பு விடுத்துள்ளார்.