ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர், உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலையும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ஈரான் அறிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் மற்றும் இஸ்ரேல்-லெபனான் இடையே மீண்டும் போர் மூண்டது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது நெதன்யாகுவை ட்ரம்ப் கடுமையாகக் கண்டித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த உரையாடலில், “நீ ஒரு கிறுக்கன் நான் மட்டும் இல்லை என்றால் நீ சிறையில் இருந்திருப்பாய், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் நீ செய்யும் வேலைகளால் இப்போது எல்லோரும் உன்னையும் இஸ்ரேலையும் வெறுக்கிறார்கள்” என்று ட்ரம்ப் கூறியதாகப் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொலைப்பேசி உரையாடல் நடந்ததை அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு ஆகிய இருவருமே உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
