ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது மகனான 56 வயது முஜ்தபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “அவர் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நம்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானின் இந்தத் தலைமை மாற்றம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், முஜ்தபா காமேனி அமைதியாக ஆட்சி நடத்த முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அமெரிக்காவிற்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். முஜ்தபா காமேனி தனது தந்தையின் அதே கடுமையான கொள்கைகளையே பின்பற்றுவார் என்பதால், இது ஈரானில் அமைதியைக் கொண்டு வராது என அவர் கருதுகிறார். முஜ்தபா காமேனியின் இந்தப் பிடிவாதமானப் போக்குத் தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்கா மீண்டும் ஈரானுடன் போரிட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 மடங்கு கடுமையானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தும் எனத் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே சமயம், ஈரானிய அதிகாரிகள் டிரம்பின் இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
